கிழக்கில் சங்கரி தலைமையில் புதிய கூட்டணி!

தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில், கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை அறிவித்தார்.

“கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.

கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 4 கட்சிகளான வீ.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.

குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!