மருதனார்மடம் விடுதியில் 41 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று நேற்றிரவு இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருதனார்மடம் – காங்கேசன்துறை வீதிப் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் கூடுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

இராணுவத்தினர் முற்றுகையிட்டிருந்த விடுதியினுள் நுழைவதற்காக விடுதி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் பின்புலமுள்ள குறித்த விடுதி நிர்வாகத்தினை மீறி உள்நுழைய முடியாமல் இராணுவத்தினர் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் முற்றுகையில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்தின் பின்னர், விடுதியினுள் நுழைந்த படையினரால் அங்கு கூடியிருந்த 41 இளைஞர்கள் இராணுவ ட்ரக் வண்டியிலும், தனியார் வாகனங்களிலும் ஏற்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். இதன்போது 23 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களுடன் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக படைத்தரப்பில் கூறப்பட்டது.

எனினும், இந்த தேடுதலில் ஆயுதங்கள் எவையும் கைப்பற்றப்படவில்லை. அத்துடன் இளைஞன் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விருந்துபசாரம் நடந்து கொண்டிருந்த போதே இராணுவத்தினர் நுழைந்து அவர்களைக் கைது செய்து கொண்டு சென்றனர் என விடுதி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!