சஜித்தை பிரதமராக்கி புதிய அரசு அமைப்பது உறுதி!

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி அவரின் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

எல்ல, பல்லகெட்டுவ பகுதியில் ​நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்தவித இன ரீதியான வேறுபாடுகளும் இல்லை என தெரிவித்தார்.

ஆனால் இவ்வாறான ஒரு கட்சியின் மீது இனவாத சேற்றை பூசியே தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஆட்சியை கைப்பற்றியவர்கள் வழங்கிய எந்தவித உறுதிமொழிகளும் இதுவரை நிறைவேற்றப்படாமையால் வாக்களித்த மக்கள் புலம்பிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணி இனவாதம் பேசி மக்களை வஞ்சிக்கும் கட்சி அல்ல எனவும், ஆகவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் தமிழ் வாக்குகளை சிதறடிக்க சிலர் முயற்சித்து வருவதாகவும் அதற்கு இடமளிக்காது பதுளையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!