சர்வதேசம் தலையிட முடியாதென பான் கீ – மூனுக்கு கூறியிருந்தேன்!

இலங்கை அரசு சொல்லும் விடயங்களைத் தான் சர்வதேசம் கேட்க வேண்டும் எனவும், நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேசம் நடவடிக்கைகளை எடுக்க முடியாது எனவும் ஐ.நா பொதுச்செயலராக இருந்த பான் கீ – மூனுக்கு தெரிவித்திருந்தேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்த பின்னர் அப்போதைய ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தமே இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தியதுடன், நாடும் சர்வதேச பொறிக்குள் சிக்க வேண்டி வந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச-

“2009ம் ஆண்டு மே மாதம் இறுதிப் போர் முடிவடைந்தவுடன் பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் பான் கீ – மூனுடன் இலங்கை அரசு கூட்டு ஒப்பந்தம் செய்தமை அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்த ஒப்பந்தத்தின்போது நாங்கள் (இலங்கை அரசு) சொல்லும் விடயங்களைத்தான் சர்வதேசம் கேட்க வேண்டும் எனவும், நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேசம் நடவடிக்கைகளை எடுக்க முடியாது எனவும் பான் கீ – மூனுக்கு தெரிவித்திருந்தேன்.”

“2015ஆம் ஆண்டுவரை நாம் ஆட்சியில் இருக்கும்வரைக்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாம் ஆதரிக்கவில்லை.

அதேவேளை, எமக்கு எதிராக சர்வதேசம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு வரைக்கும் இலங்கை மீதான ஐ.நாவின் இரண்டு தீர்மானங்களுக்கு ‘நல்லாட்சி’ என்ற பெயரில் இயங்கிய ரணில் அரசு ஆதரவு வழங்கியுள்ளது.இதனால்தான் எமது நாடு சர்வதேச வலைக்குள் சிக்கியது.

இந்த ஆபத்திலிருந்து மீளவே ஐ.நாவின் 30/01 மற்றும் 40/01 ஆகிய தீர்மானங்களுக்கான இணை அனுசரணையில் இருந்து வெளியேறுகின்றோம். இவ்வாறு நாம் செய்வதால் நாட்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

“போரின்போது குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் அவை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.அந்த நடவடிக்கையும் உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமையவே இருக்க வேண்டும். வெளிநாடுகள் இதில் தலையிட முடியாது.என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!