புலம்பெயர் தமிழர்களின் தகவல்களை தந்தால் தான் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும்!

போரில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமெனில், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் “ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 40 இன் கீழ் ஒன்றாம் தீர்மானத்திலிருந்து இருந்து, வெளியேற இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனால், சிலர் 30 இன் கீழ் ஒன்றாம் தீர்மானம் தொடர்பாகவும் குழப்பத்தில் உள்ளார்கள். 30 இன் கீழ் ஒன்றாம் தீர்மானமானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதாகும்.

இதற்கு இலங்கையும் இணை அணுசரனை வழங்கியது. 2019, மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் 40 இன் கீழ் ஒன்றாம் தீர்மானமாகும். இது, முன்னைய தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கும், இலங்கையின் கடந்த அரசாங்கம் இணை அணுசரனை வழங்கியது. இதிலிருந்துதான் இலங்கை தற்போது வெளியேறுவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, நாடாளுமன்றம், மக்கள் என யாரிடமும் அனுமதி பெறாமல்தான் இந்தத் தீர்மானத்திற்கு, இலங்கை இணை அணுசரனை வழங்கியது.

இலங்கை இராணுவம், இறுதி யுத்தத்தின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டே இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு எந்த சாட்சியும் கிடையாது.

அதேபோன்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர் எனக் கூறப்படும் பெரும்பாலானோர் இன்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இறந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறப்படுபவர்கள், ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருவதோடு, இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஐ.நா. அமர்வு இடம்பெறும்போது இதுபோன்ற நபர்கள் ஐரோப்பா நாடுகளில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கிறார்கள். இப்படியான புலம் பெயர்ந்தவர்களின் விபரங்களை நாம் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரியிருந்தும், இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் போது இறந்தவர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமெனில், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை எமக்கு வழங்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கிறோம்.” என கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!