வித்தியாசமான முறையில் யோகாசனம் செய்து அசத்திய மாணவி!

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி ஆகியவை இணைந்து நீர் மேலாண்மை பாதுகாப்பை வலியுறுத்தி திருவண்ணாமலையை சேர்ந்த தொழில்அதிபர் விவேக்குமார் மகள் மாணவி த்ரித்தி (வயது 9) 3 மண் பானையில் மீது யோகா ஆசனங்கள் செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி தாளாளர் தர்மிசந்த்சவுகார் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி மாணவியின் உலக சாதனை முயற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் மாணவி த்ரித்தி பத்மாசனம், உட்கட்டாசனம், பருவதாசனம், பாதகஸ்தாசனம், தாடாசனம் உள்பட 20க்கும் மேற்பட்ட ஆசனங்களை முதலில் ஒரு பானை, பின்னர் 2 பானைகள் ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அதன் மீது நின்று செய்து காண்பித்தார்.

மேலும் உலக சாதனை முயற்சியாக 3 பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி அதன் மீது அமர்ந்து 17 நிமிடம் பத்மாசனம் செய்தார். மாணவியின் முயற்சியை சக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர் கண்டு வியந்தனர். தொடர்ந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவியை கலெக்டர் பாராட்டினார். நிகழ்ச்சியில் கவுதம்குமார், மகாவீர்குமார், அரவிந்த்குமார், தர்‌ஷன்குமார், வி.டி.எஸ். பள்ளி தாளாளர் பவன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சாயர் குழுமத்தினர் செய்து இருந்தனர். முடிவில் சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக பயிற்சியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!