தோல்வியடைபவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமில்லை!

பொதுத்தேர்தலில் தோல்வியடைபவர்களை தேசிய பட்டியலின் ஊடாக ஒருபோதும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படமாட்டார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதிபட தெரிவித்துள்ளார்.

‘மார்ச் 12’ அமைப்பினருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

மார்ச் 12 அமைப்பிற்கும் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. மோசடிகளுடன் தொடர்பற்ற அரசியல்வாதிகளை தேர்தலில் நிறுத்துவது குறித்து இந்த அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவருடன் கலந்துரையாடியுள்ளது.

இதில் மார்ச் 12 அமைப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைப்பின் ஏற்பாட்டாளரும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளருமான ரோஹண ஹெட்டியாரச்சி கூறியதாவது.

பொதுத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் எமது அமைப்பு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது. பாராளுமன்றத்திற்கு திறமையுள்ள தூர நோக்கான நபர்களை அனுப்பும் வகையில் வேட்புமனு வழங்குமாறு கோரினோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டோம். தோல்வியடைந்தவர்களை தேசிய பட்டியலினூடாக நியமிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினோம்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், தனது தலைமையிலான கூட்டணியில் தோற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாது என்று தெரிவித்தார். தான் இதற்கு முன்னர் தலைமை வகித்த சமயத்திலும் தோற்றவர்களுக்கு இடமளிக்கவில்லை என்றும் பிரதமர் எங்களிடம் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பினூடாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!