டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23-ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், சாலைகளில் வாகனங்கள், டயர்களை எரித்தும் வெறியாட்டம் போட்டனர்.

மேலும் இரு தரப்பினரும் கம்பு, தடிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் அழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

எனினும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல இடங்களில் தெருக்கள் வெறிச்சோடி ஊரடங்கு போன்ற நிலை காணப்பட்டது. இதற்கிடையே வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர் நேற்றும் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. டெல்லியில் நீடித்த 72 மணி நேர பதற்றம் தற்போது சற்று தணிந்துள்ளது. படிப்படியாக அமைதி நிலை திரும்புவதை காண முடிகிறது. வன்முறை வெடித்த வடகிழக்கு டெல்லியில் படல இடங்களில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!