தீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள்

டில்லியில் கலவரத்தின் போது பள்ளி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதில் புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.

டில்லியின் வடகிழக்கு பகுதியில் பிரிஜ்புரி சாலையில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3000 குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிப்.,25 அன்று, காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிந்து சென்ற பிறகு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பள்ளியின் காசாளர் நீத்து சவுத்ரி கூறுகையில், மாலை 4 மணியளவில் சுமார் 250 முதல் 300 பேர் அனைத்து பக்கமும் இருந்து பள்ளிக்குள் வந்துள்ளனர். ஒன்றும் புரியாத காவலாளி, உயிரை காப்பாற்றிக் கொள்ள பின் கேட் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.

பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றுள்ளனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தோம். ஆனால் பதற்றமான நிலை காரணமாக இரவு 8 மணிக்கே தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர் என்றார்.

இதில் நூற்றுக்கணக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள், ஆவணங்கள் ஆகியன சாம்பலாகி உள்ளன. மேஜை, நாற்காலிகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களுக்கு பின் பள்ளிக்கு சென்று பார்த்த பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், மாணவர்கள், அனைத்து பொருட்களும் சாம்பலாகி உள்ளதை கண்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!