இலங்கைக்கு பதிலடி கொடுக்கும் ஐ.நா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள இலங்கை அரசை ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் சும்மாவிடாது. அவை பதிலடியை வழங்கியே தீரும். அதனால் எமது நாடு பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

“எமது அரசு (ரணில் அரசு) நாட்டின் ஜனநாயக நடைமுறைகளை மீறி – அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆலோசிக்காமல் அரசமைப்புக்கு விரோதமா கவே ஐ.நாவின் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியது என ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இப்படி எம்மீது பழியைப் போட்டுவிட்டதால் தாம் தப்பிப்பிழைக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது. ஆனால், இந்த அரசு இப்படிக் கூறித் தப்பமுடியாது. ஐ.நாவும் அதன் உறுப்பு நாடுகளும் இந்த அரசை சும்மாவிடாது. அவை செயலில் பதிலடியை வழங்கியே தீரும். அதனால் எமது நாடும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும்.

அரசின் சுயநல அரசியல் தேவையால் சர்வதேச அரங்கில் எமது நாடு தனிமைப்படுத்தப்படவுள்ளது. அதேவேளை, எமது நாடு மோசமான பொருளாதார நெருக்கடியையும் சந்திக்கக்கூடும். ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைகூட மீண்டும் இடைநிறுத்தப்படலாம்.

போர் நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி – தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தாலேயே சர்வதேசப் பொறிமுறை விசாரணையை இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டு வந்தது.

அந்த இக்கட்டான நிலையில்தான் சர்வதேச உறவைப் பலப்படுத்தும் வகையில் தீர்மானங்களுக்கு எமது அரசு (ரணில் அரசு) இணை அனுசரணை வழங்கியிருந்தது. நாம் இணை அனுசரணை வழங்கியபடியால்தான் ராஜபக்ச குடும்பத்தி னரும், இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். அதுமட்டுமல்ல எமது நாட்டின் மரியாதையும் சர்வதேச அரங்கில் காப்பாற்றப்பட்டது. இப்படியான நன்மைகளை நாம் செய்துள்ள போதிலும் இலங்கை யை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்துவிட்டோம் என்று ராஜபக்ச அணியினர் எம்மைத் திட்டுகின்றார்கள்.

அதேவேளை, தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் எம்மைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் அந்த அணியிலுள்ள ஒருசிலர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப் பார்த்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று எமக்குத் தெரியவில்லை.

ஆனால், சர்வதேசத்தை இந்த அரசு பகைத்துள்ளதால் இலங்கை பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை மட்டும் இப்போது உறுதியாகக் கூறுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!