தினேஷ் குணவர்தனவுக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை வெளியுறவு அமைச்சர் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சேலெட் (Michelle Bachelet) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை வெளியுறவு அமைச்சின் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 40/1 மற்றும் அதனை ஒத்த ஏனைய பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கும் தீர்மானத்தில் இருந்து விலகும் தீர்மானத்தினை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு இதன்போது மீள வலியுறுத்தியுள்ளார்.

இணை அனுசரணையில் இருந்து வெளியேறிய போதிலும் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான கடப்பாட்டை நிறைவேற்றும் அரசாங்கத்தின் விருப்பத்தையும் அமைச்சர் இதன்போது முன்வைத்தார்.

இதனை அடுத்து, மனித உரிமை பேரவையின் உயர்மட்ட சந்திப்பில் பங்குபற்றியமைக்கு நன்றி தெரிவித்த பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சேலெட் (Michelle Bachelet), இணை அனுசரணையில் இருந்து விலகியமைக்கு கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட தீர்மானித்தமை, காணாமல் போனோர் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்றவற்றை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்தமை உள்ளிட்ட விடயங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!