மைத்திரி -ரணில் அரசால் பழிவாங்கப்பட்ட பிள்ளையான் -சீலரத்தின தேரர் ஆவேசம்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்தது அரசியல் பழிவாங்கல் என ஜனசென பெரமுனை கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்தின தேரர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை சென்ற தேரர் சந்திரகாந்தனை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து செய்தது என்னவென்றால் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்து அரசியல் பழிவாங்கலை செய்ததுதான்.

இந்த நாட்டில் இன ஒற்றுமை என்பது தமிழர்கள் சிங்களவர்கள் என எல்லோரும் ஒன்று சேர்ந்து எமது தாய் நாட்டை விடுவித்த சந்தர்ப்பத்தில் அபிவிருத்தி செய்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்தது மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயமாகும்.

தற்போதைய அரசு பிள்ளையானுக்கு பிணை வழங்கி அவருடைய செயற்பாட்டை செய்வதற்கு இடமளிக்கும் என நாங்கள் அமைதியாக இருக்கின்றோம்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்கின்றேன். வழக்கு தொடர்ந்து செல்வதால் இது தொடர்பாக நான் எந்த வசனமும் தெரிவிக்க விரும்பவில்லை.

நான் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த வழக்கை விரைவில் ஆராய்ந்து தீர்ப்பை வழங்கி நிரபராதி என்றால் நிரபராதி எனவும் குற்றவாளி என்றால் குற்றவாளி எனவும் அவர்களுக்கு பிணை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அனைத்து இனங்களும் ஒன்று சேர்ந்து நாட்டினை கட்டியொழுப்ப வேண்டும் இல்லையெனில் இந்த நாட்டினை எவராலும் கட்டியெழுப்ப முடியாது ஒவ்வொருவருக்கும் இடையே வைராக்கியம் வேண்டாம் அப்படி வைராக்கியம் செய்பவர்களுக்கு பௌத்த மதகுரு என்ற வகையில் கருணை, அன்பு, செலுத்தி ஆசீர்வசிப்போம் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!