வடமராட்சி கிழக்கில் ரிஐடியினரால் ஒருவர் கைது!

வடமராட்சி கிழக்கு, கேவிலைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார். நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா உதயசிவம் (வயது 39) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.

நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் மருதங்கேணிப் பொலிஸாருன் வந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவரைக் கைதுசெய்துள்ளனர் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

“பிள்ளைகளைக் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிக்காக அழைத்துச் சென்று செம்பியன்பற்று அ.த.க. பாடசாலையில் நின்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றது. கைதுக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளேன்” – என்று அவரது மனைவி மேலும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட செல்வராசா உதயசிவம் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுவின் முன்னாள் செயலாளராகவும், பல்வேறு பொது அமைப்புக்களின் முன்னாள் உறுப்பினராகவும் பதவிகளில் இருந்துள்ளார். இதன்போது சட்டவிரோத கடல் தொழில், பனைமரம் தறிப்பு மற்றும் வன அழிப்பு போன்றவற்றுக்குக் எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளார். பல தடவைகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய இவர், ஏற்கனவே ஒரு தடவை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

தனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பல முறைப்பாடுகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இவர் பதிவு செய்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!