சவுதியில் அரச குடும்பத்தை சேர்ந்த மூவர் திடீர் கைது!

சவுதி அரேபிய அரசரின் சகோதரர் உட்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மூத்த உறுப்பினர்கள் வெளியிடமுடியாத காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதான மூவரில் இருவர் சவுதி அரேபியாவில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் சவுதி பட்டத்து இளவரசர் சல்மானுக்கு எதிராக ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக கூறியே மூவரும் கைது செய்யப்பட்டதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

சவுதி அரச குடும்பத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், பட்டத்து இளவரசர் சல்மான், ஆட்சி அதிகாரத்தில் தமது பிடிப்பை மேலும் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை பகல், பட்டத்து இளவரசர் சல்மானின் சிறப்பு பதுகாப்பு படையே இவர்கள் மூவரையும் அவர்களது குடியிருப்புகளுக்கு சென்று கைது செய்துள்ளது.

கைதான இருவர் சவுதியின் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்க தகுதியானவர்கள் எனவும், தற்போது சவுதியின் ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.கைதான மூவருக்கும் வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டில் பட்டத்து இளவரசர் சல்மானின் உத்தரவின் பேரில் டசின் கணக்கான சவுதி அரச பிரமுகர்கள், அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு ரியாத்தின் ரிட்ஸ்-கார்ல்டன் ஹொட்டலில் அடைத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!