பொன்சேகாவின் குற்றவாளிகள் பட்டியலில் மைத்திரி, ரணில், ருவன்!

பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே வைத்திருக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எவ்வாறு பாதுகாப்பு துறையினருக்கு கட்டளையிட முடியும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

‘ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டால் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களைப் போன்று மீண்டுமொரு சம்பவம் இடம்பெற்றால் நாட்டில் பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லை .

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான குழுவில் நானும் அங்கத்துவம் வகித்தேன். 68 பக்கங்களில் நான் தனியாக ஒரு அறிக்கை தயாரித்திருக்கிறேன். அதில் முதலாவது குற்றவாளியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், இரண்டாவது குற்றவாளியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், முன்றாவது குற்றவாளியாக நீதித்துறை அமைச்சரையும், நான்காவது குற்றவாளியாக முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்த சிலர் வெளியிட்ட கருத்துக்கள் என்பனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைக் காரணமாக அமைந்தது.

இறுதி நேரத்தில் இவ்வாறு நடைபெற்றாலும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!