கொழும்பு, களுத்துறை, கம்பஹா மிக ஆபத்தான வலயங்களாக பிரகடனம்!

கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களாக, அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள், மிக ஆபத்தான வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி மாவட்டங்களுக்கு, மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேற்படி மாவட்டங்களில், பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் அதிகளவு பொதுஇடங்களில் ஒன்றுகூடினர் என்றும், இதனால் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனைக் கருத்திற்கொண்டே, மேற்படி மாவட்டங்களை மிக ஆபத்தான வலயங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை முதல், அத்தியாவசியமான பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில், சில வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லொறி, வான், ஓட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் பொருள்களைக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கும் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில், இந்த வாகனங்கள் சேவையில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!