சண்டிலிப்பாயில் 214 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு?

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மூலம், சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாவடிப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நபரின் மனைவி சமுர்த்தி உத்தியோகஸ்தராவார். அவர் அண்மையில் 214 சமுர்த்தி பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கியுள்ளார். எனவே அவரிடம் இருந்து சமுர்த்தி கொடுப்பனவினை பெற்றுக் கொண்ட பயனாளிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கை உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அவரது உறவினர் என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த பணியாளர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், குறித்த வங்கி கிளை அலுவலகத்தில் கிருமி நீக்கிகள் இன்று விசிறப்பட்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!