உலகையே சோகத்தில் ஆழ்த்திய நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி!

நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு மசூதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய நபர் தான் 51 பேரை சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுமட்டுமின்றி, மேலும் 40 பேரை சுட்டுக்கொல்ல முற்பட்டதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதான பிரெண்டன் டர்ரன்ட் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தன் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த இவரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி இந்த துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதல் உலகையே அதிர செய்ததது. கண்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுக் கொல்லும் காட்சிகளை இவர் ஃபேஸ்புக்கில் நேரலை செய்த நிலையில், அதை உடனடியாக அந்நிறுவனம் நீக்கிவிட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நியூசிலாந்து தனது நாட்டின் துப்பாக்கி பயன்பாட்டு விதிமுறைகளை கடுமையாக்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பதால் நியூசிலாந்து முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் காணொளி காட்சி வழியாக விசாரணையில் பங்கேற்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!