இந்தியாவில் மதகுரு மூலமாக 53 பேருக்கு பரவிய கொரோனா! அறியாமையால் ஏற்பட்ட விபரீதம்

இந்தியாவில் மதகுரு ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தும் அது தொடர்பில் அலட்சியமாக இருந்ததனால் அவர் மூலமாக 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனக்கு கொரோனா இருப்பது தெரியாமல் மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த மதகுரு ஒருவர் பிலிப்பைன்ஸிலிருந்து வந்த பயணிகளுடனும், மும்பை வாசிகளிடமும் பழகினார்.

இதனையடுத்து, தற்போது 52 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அறிந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் முஸ்லிம் மதகுருவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் மனைவி, மகள், மகன் ஆகியோரின் இரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ம் திகதி முதல் 12-ம் திகதி வரை நவி மும்பையில் உள்ள வாஷி பகுதியில் உள்ள மிகப்பெரிய மசூதிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் சிலர் வந்தனர். அங்குள்ள தலைமை மதகுருவுடன் பேசி, மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அப்போதே அந்த மதகுருவுக்கு கொரோனா இருந்துள்ளது. ஆனால், அது தெரியாமல் அவர் அனைவருடனும் பழகி வந்தார்.

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் பயணிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிசிச்சைக்கு வந்தபோதுதான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு முதியவர் கொரோனாவிலிருந்து குணமடைந்த போதிலும், சிறுநீரகக் கோளாறு இருந்ததால், கடந்த இரு நாட்களுக்கு முன் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் உயிரிழந்தார்

அந்த மதகுருவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு, அவருடன் நெருக்கமாகப் பழகிய 53 பேர் அடையாளம் காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் வந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. இதனால், பிலிப்பைன்ஸ் பயணிகள் உள்பட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மசூதியைச் சுற்றியுள்ள 1,200 வீடுகளும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

நவி மும்பையில் இதுவரை 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மதகுரு, பிலி்ப்பைன்ஸ் நாட்டவர்கள் 3 பேர், உள்ளூர் வாசி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நவி மும்பையில் இதுவரை 250 பேர் வீடுகளில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 58 பேர் வெளிநாடு சென்று வந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!