கொரோனா அபாய வலயத்துக்குள் வடக்கு மாகாணமும் சேர்ப்பு!

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுடன், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

“ஜனாதிபதிக்கு அரசமைப்பால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றை இலங்கையிலிருந்து ஒழிப்பதில் அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கான நெறிப்படுத்தல் அதிகாரம் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஏனைய மாவட்டங்களுக்கும் செயலணி கவனம் செலுத்த வேண்டும்.

நெல், தானியங்கள், மரக்கறி, மீன், பால், முட்டை உற்பத்திகள் மற்றும் தேயிலை, கறுவா, மிளகு போன்ற பெருந்தோட்ட உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குவது ஏனைய பணிகளுக்கு மத்தியில் முதன்மையானவையாகும்.

அத்தியாவசிய உலர் உணவு, மருந்து இறக்குமதி தேயிலை, துப்பரவு ஆடைகள் போன்றவற்றின் ஏற்றுமதியை இலகுபடுத்துவதற்காக இலங்கை துறைமுகம், சுங்கம், நிறுவன வங்கிகள் மற்றும் ஏனைய உரிய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தலும் வேறு பணிகளாகும்.

கிராமிய மட்டங்களில் உற்பத்தியாளர்களினால் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு பெற்றுக்கொடுத்தல், நெறிப்படுத்தல் அறிக்கையை ஜனாதிபதிக்கு முன்வைத்தல் ஆகியனவும் செயலணியின் பணிகளாகும்.

சேவைகளை வழங்குவதற்காக உதவிகள் கோரப்படும் அனைத்து அரச அதிகாரிகளும் அத்தகைய ஏனையவர்களும் அப்பணிகள் சம்பந்தமான அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.

அதிகாரி ஒருவரால் வழங்கப்படும் கடமை அல்லது பொறுப்பை நிறைவேற்றுவதை தாமதப்படுத்துவது அல்லது நிறைவேற்றத் தவறுதல் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கையிடுமாறும் செயலணிக்கு பணிக்கப்பட்டுள்ளது” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!