வடக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கு 6ஆம் திகதி விடுதலை!

கொரோனா வைரஸ் தொற்றுள்ளானவர்கள் என வடக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் எதிர்வரும் 6 ஆம் திகதிக்குப் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொள்ள சுவிஸில் இருந்து வருகை தந்த பாஸ்டருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த மத நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து வருகை தந்த பாஸ்டரை சந்தித்த யாழ் தாவடியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை ஏற்கனவே உறுதி செய்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் எதிர்வரும் 6 ஆம் திகதி விடுவிக்கப்படுவர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அரியாலையில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட 319 பேர் யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோன்று கிளிநொச்சி மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் இதுவரை கொரோனோ தொற்று இணங்காணப்படவில்லை. ஆனாலும் தனிமைப்படுத்தும் காலம் முடிவடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படடிருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்தக் காலத்திற்குள் அவர்களுக்கு தொற்று ஏதும் காணப்படாதவிடத்து எதிர்வரும் 6 ஆம் திகதி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!