வடக்கில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வடக்கில் இரண்டு இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் எட்டுப் பேருக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேரில் நான்கு பேருக்குமே, தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர். ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர். எட்டுப் பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியைச் சேர்ந்த தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.

அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக இம்மாதம் முதலாம், மூன்றாம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில், பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த எட்டுப் பேருக்கும், முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு பேருக்குமே, தொற்று உறுதி செய்யப்பட்டது.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரில், 7 பேர் அரியாலையையும் ஒருவர் வவுனியாவையும சேர்ந்தவர்கள் என்று தெரிய வருகிறது.

அரியாலையைச் சேர்ந்த தந்தை மற்றும் 7 வயது, 11 வயதுடைய மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் தொற்றுக்குள்ளானவர்களில் அடங்கியுள்ளனர்.

இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வெலிக்கந்தைக்கு அனுப்பப்படவுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!