கோவிட்-19: 12 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 21 நாள் ஊரடங்கு, மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தொடர்ந்து 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா தனது கொட்டத்தை அடக்கிக் கொள்ளாமல், தொடர்ந்து பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 1,000 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் மாலை வரை இந்த வைரசால் 10,815 பேர் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில், இந்த எண்ணிக்கை நேற்று மாலை 12 ஆயிரத்தை நெருங்கியது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரம், கொரோனாவால் 11,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 39 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,197 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், இதுவரை 1,344 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 4-ல் ஒரு பங்கினர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்தநிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 380-ஐ தாண்டி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!