யாழ்ப்பாணத்தில் ஊரடங்கை ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்டக் கிளையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு, யாழ் மாவட்டக் கிளையினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சுகாதார அதிகாரிகளை தமது சங்கத்தினர் நேற்று சந்தித்துப் பேசியதாகவும், இதன்போதே அவர்களின் பரிந்துரைகளுக்கு மாறாக ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் மதகுருவினால் தொற்றுக்குள்ளான 16 பேருடன் தொடர்பில் இருந்த 320 பேரில் இன்னமும் 80 பேருக்கு கொரானா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து வந்த 1200 பேருக்கும் இன்னமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மருத்துவர் காண்டீபன் குறிப்பிட்டுள்ளார். எனவே, வடமாகாண சுகாதார மருத்துவ அதிகாரிகளின் பரிந்துரைப்படி, யாழ். மாவட்டத்தில் குறைந்தபட்சம் இன்னும் ஒரு வாரகாலத்துக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தமது சங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!