பிரித்தானியாவில் அனாதையாக இறந்துகிடந்த செவிலியர்: உதவிக்கு அழைத்தும் கண்டுகொள்ளாத சோகம்!

பிரித்தானியாவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துவந்த என்.எச்.எஸ் நர்ஸ் ஒருவர், 111 இலக்கத்திற்கு உதவி கேட்டு அழைத்தும் கண்டுகொள்ளப்படாத நிலையில் தனது குடியிருப்பிலேயே பரிதாபமாக இறந்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்ட 51 வயதான செவிலியர் டொனால்ட் சுயெட்டோவின் உடல் நலம் தொடர்பில் அக்கறை கொண்ட நலம் விரும்பிகள் அளித்த தகவலை அடுத்தே பொலிசார் அவரது குடியிருப்பை நாடுச் சென்றுள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ள சுயெட்டோ, கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து தமது குடியிருப்பில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

உடல் நிலை மோசமானால் கண்டிப்பாக என்.எச்.எஸ் 111 இலக்கத்திற்கு அழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவரது அழைப்புகள் பதிலளிக்கப்படாமல் போகவே, இறுதியில் மரணத்தை அவர் தழுவியுள்ளார். இறப்பதற்கு முந்தைய நாள் பிலிப்பைன்ஸில் உள்ள தாது வயதான தாயாரிடம், இந்த தொற்றுநோயில் இருந்து மீண்டு வருவேன் என்பது சந்தேகமே, எனது உடல் முழுவதும் கத்தியால் தொடர்ந்து தாக்குவது போல உணர்கிறேன் என அவர் கண்கலங்கியுள்ளார்.

ஆஸ்துமா நோயாளியான சுயெட்டோ, ஏப்ரல் 7 ஆம் திகதி, தாம் பணியாற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பாதுகாப்பு கருவிகள் பற்றாக்குறை தொடர்பில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் சுயெட்டோவின் மருமகளும் செவிலியருமான எமிலீன் கூறுகையில், நடந்தவை மிகவும் மோசமான சம்பவம். கொரோனா பாதிப்பால் 111 இலக்கம் எப்போதும் தொடர்பில் இருந்ததால், சுயெட்டோவின் அழைப்பு இணைப்பில் வராமல் போயுள்ளது என்றார். மேலும், தமது மாமா என்.எச்.எஸ் சேவைக்கு 18 ஆண்டுகள் பணியாற்றிவிட்டார், தற்போது அதற்கான இறுதி விலையையும் செலுத்தியுள்ளார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!