கோவிட்-19: பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது!

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எவ்வளவோ தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் போதிலும், அவற்றையெல்லாம் முறியடித்து கொரோனா தனது கோர தாண்டவத்தை தொடருகிறது. ஆரம்பத்தில் மெதுவாக பரவிய நோய்த்தொற்று தற்போது வேகமெடுத்துள்ளது. ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது, தங்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய வேண்டும் என்று எண்ணி விழித்த காலம் போய், இன்றாவது இந்த கொலைகார கொரோனாவின் கொட்டம் அடங்க வேண்டும் என துயிலெழும்போதே பலரையும் வேண்ட வைத்துவிட்டது இந்த ஆட்கொல்லி வைரஸ். ஆனால் மாறாக கொரோனா பலரையும் தனது வலையில் சிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் புதிதாக 1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 49 பேர் பலியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 652 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 15,850-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3,950-க்கும் அதிகமானவர்கள் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே இந்த வைரஸ் பிடியில் மராட்டிய மாநிலம் சிக்கி தவித்து வருகிறது. அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,200-ஐ தாண்டிவிட்டது. இந்த வைரஸ் அங்கு 250-க்கும் அதிகமானோரின் உயிரையும் காவு வாங்கிவிட்டது. குஜராத்தில் திடீரென வேகமெடுத்த இந்த வைரஸ் குறுகிய நாட்களிலேயே 103 பேரின் உயிரை பறித்துவிட்டது. இதனால் அதிக உயிரிழப்பை சந்தித்த 2-வது மாநிலமாக குஜராத் இருக்கிறது. அங்கு 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2,400-ஐ கடந்துவிட்டதால், வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலிலும் குஜராத் 2-வது இடத்தில் உள்ளது.

இந்திய தலைநகர் டெல்லியிலும் கொரோனா 45-க்கும் மேற்பட்டவர்களை உயிரிழக்கச் செய்துவிட்டது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு 2,100-ஐ கடந்துள்ளது. ராஜஸ்தானில் புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,800-ஐ தாண்டிவிட்டது. மத்திய பிரதேசத்தில் 1500-க்கு மேற்பட்டவர்களையும், உத்தரபிரதேசத்தில் 1,400-க்கு அதிகமானவர்களையும் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் 800-க்கும் அதிகமானோரும், கர்நாடகாவில் 420-க்கும் மேற்பட்டோரும் வைரஸ் பிடியில் சிக்கி உள்ளனர்.

கேரளாவில் சில நாட்களாக வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் 18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதேபோல நேற்றும் புதிதாக 11 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். இதில் 2 பேர் கோழிக்கோடு மருத்துவகல்லூரியை சேர்ந்த இளம் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் வெளிமாநிலத்துக்கு சென்று வந்ததாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். புதிதாக வைரஸ் தொற்று உறுதியான 11 பேரையும் சேர்த்து கேரளாவில் மொத்தம் 437 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!