”சீர்திருத்தம் குறித்து ஆராயாமல் அதனை நடைமுறைப்படுத்த முடியாது”

மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்துள்ள 20 ஆவது சீர்திருத்தம் தொடர்பில் இதுவரை ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந் நிலையில் அதன் கொள்கைகளை ஆராய்ந்து பார்க்காது அத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை வழங்க முடியாது என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தின் நோக்கம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதாகும். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர் தரப்பின் பாரிய எதிர்ப்புக்களை சந்தித்த வண்ணமே உள்ளது. அதில் ஒன்றாக மக்கள் விடுதலை முன்னணியினர் முன்வைத்துள்ள 20 ஆவது சீர்திருத்தமும் அமைகிறது.

தேசிய அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்குடனேயே இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இத் திருத்தம் குறித்து கலந்துரையாட வேண்டும் அத்துடன் சீர்திருத்தத்தின் கொள்கைகள் தொடர்பாக ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.

எனவே இவ்வாறான ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாது, சீர்திருத்தம் குறித்து கலந்துரையாடமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியினை வழங்க முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!