கொரோனா தொற்றினால் அதிக உயிரிழப்பு ஏற்படும் சாத்தியம் இல்லை!

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம், சடலங்களைப் பொதி செய்யும் 1000 பைகளை தருமாறு, சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் சடலங்களைப் பொதி செய்யும் பைகளைக் கோருவது வழக்கமான ஒரு கோரிக்கை தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை எதிர்பார்க்க முடியாது என்றும், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், அதிகளவு மரணங்கள் நிகழாமல் தடுக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

சடலங்களைப் பொதியிடும் பைகள் மட்டுமன்றி, ஏனைய அனைத்து மருத்துவ உபகரணங்களும் கூட, சுகாதார அமைச்சினால், சேமித்து வைக்கப்படுவது ஒரு சாதாரண நடைமுறையே என்றும் அவர், தெரிவித்துள்ளார்.

சடலங்களைப் பொதியிடம் பைகள் கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களுக்கு மட்டுமன்றி, பிற இறப்புகளுக்கும் கூட பயன்படுத்தப்படுகின்றன என்றும் மருத்துவர் அனில் ஜாசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!