கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி மருத்துவர்!

பெண் மருத்துவர் ஒருவரின் சான்றிதழை பயன்படுத்தி போலி மருத்துவர் கொரோனாவுக்கு மருந்து வழங்கி வந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு வாசல் பகுதியில் வசித்து வரும் முரளி கண்ணன், பழங்காநத்தம் மருது பாண்டி நகரில் ஓம் கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்துள்ளார். இப்பகுதியில் முக்கிய மருத்துவராக அறியப்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் அவர் சில நோயளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அவரை குறித்து விசாரித்ததில் போலி மருத்துவர் என்று உறுதியாகியுள்ளது.

உடனே இதைப்பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். உடனே மருத்துவ இணை இயக்குநர் சிவகுமார், உள்ளிட்டோர், மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்தினார்கள். முதலில் தன்னை எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று கூறியவர் அதற்கான சான்றிதழைக் காட்டியுள்ளார். அதிலுள்ள பதிவு எண்ணை ஆய்வு செய்ததில் அது சேலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் விசாரணையில், ‘தான் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்த அனுபவத்தில் சிகிச்சை அளிக்க முடிவெடுத்ததாகவும், பிரச்சனை வந்தால் காட்டுவதற்குப் போலியான எம்.பி.பி.எஸ். சான்றிதழை தயார் செய்து வைத்திருந்ததாகவும்’ கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையை சீல் வைத்து, அவரைக் கைது செய்தனர். சமீப காலமாக கொரோனா வராமல் இருப்பதற்குப் பலபேருக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனால் இப்பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு கலகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!