அடுத்த வாரம் புதன் இரவு தொடக்கம் திங்கள் காலை வரை தொடர் ஊரடங்கு!

எதிர்வரும், 6ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை, நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பகா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே 04ஆம் திகதி தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், மே 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு, களுத்துறை, கம்பகா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் , மே 4ஆம் திகதி தொடக்கம், மே 06ஆம் திகதி புதன்கிழமை வரை, இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

இந்த மாவட்டங்களில் மே 06ஆம் திகதி புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு சட்டம், மே 11 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் .

அதேவேளை, கொழும்பு, கம்பகா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாளாந்த இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை இயல்புநிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கை மே 11 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை தொடருதல் உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்பட வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அநாவசியமாக வீதிகளுக்கு வருவதையும், ஏனைய இடங்களில் ஒன்று கூடுவதையும் நிறுத்த வேண்டும் .

உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் வீடுகளில் இருந்து வெளியில் செல்ல வேண்டும் என்றும், இந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!