பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் – மணிவண்ணன், குகதாஸ் கண்டனம்!

யாழ்ப்பாணம் – குடத்தனைப் பகுதியில், பொது மக்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ரெலோ ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.

குடத்தனைப் பகுதியில், பொலிசார் தாக்குதல் நடத்தியதில், காயமடைந்த மூன்று பெண்கள் நேற்று பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயாராக இருப்பதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் தெரிவித்துள்ளார்.

“குடத்தனைப் பகுதியில் பொது மக்கள் மீது கண் மூடித்தனமாக பொலிஸார் தாக்குதல் நடாததியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது. அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலிசார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடத்தியமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.

இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவியை வழங்க தயாராக உள்ளேன்.இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடமராட்சி கிழக்கில் பொது மக்கள் மீது பொலிசார் நடத்தியுள்ள தாக்குதலைக் கண்டித்துள்ள, ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ், இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ நாட்டின் சட்ட ஒழுங்குகளை பாதுகாக்க வேண்டிய பொலிசார், மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மக்களின் நண்பர்களாக நடந்து கொள்ளாமல், வன்முறையாளர்களாக செயற்பட்டு, பெண்கள் மீது அடிதடிப் பிரயோகங்களை மேற்கொண்டமை, மக்கள் மத்தியில் அச்சத்தையும் பயத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத போதும் எதேச்சாதிகாரிகள் போன்று சட்டத்தை தங்களது கையில் முழுமையாக எடுத்துக் கொண்டமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

இச் சம்பவம் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணை உடனடியாக மேற் கொள்ளப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் மீள நடைபெறாது என்பதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்.

கொவிட் 19 பாதிப்பு ஒரு புறம் இருக்க இவ்வாறான மேலதிக பாதிப்புக்கள் மக்களின் அமைதி வாழ்வுக்கு ஆரோக்கியமானது இல்லை. எனவே அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!