முல்லைத்தீவை அபாய வலயமாக்குகிறது அரசாங்கம்!

தனிமைப்படுத்தல் முகாம்களின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை அபாய வலயமாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

“முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் சுகவீனம் காரணமாக மாஞ்சோலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாவடைந்துள்ளனர்.

அவர்கள் கொரோனோ வைரஸ் தொற்றினால் சாவடைந்திருக்கலாம் என சந்தேகிக்கபடுகின்றது. இது மக்களை அச்சமடைய செய்துள்ளதுடன் முல்லைத்தீவை அபாய வலயமாக்கும் அரசின் திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்க முடியும்.

அத்துடன் மாவட்டத்திற்கு மாவட்டம் பயணம் செய்வது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இன்னுமொரு மாவட்டத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமானவர்களை எமது மாவட்டங்களிற்கு கொண்டு வருவது சரியான தீர்மானமாக இருக்காது. அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகள் தொற்றில்லாத மக்களுக்கும் தொற்றினை ஏற்படுத்தி அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.

எனவே இவ்விடயங்கள் தொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சந்தேகத்திற்கிடமானவர்களை அந்தந்த மாவட்டங்களிற்குளேயே தனிமைப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவில் நேற்றுக்காலை உயிரிழந்தவர் கொழும்பில் வீடற்ற இருந்த நிலையில் இருந்த, வேலு சின்னத்தம்பி என்ற 80 வயதுடைய முதியவர் என்று தெரியவந்துள்ளது. அதேவேளை, நேற்று மாலை உயிரிழந்தவரும், சுமார் 80 வயதுடைய குணசிங்கபுரவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!