கொரோனா குறித்து சீனா மறைத்த உண்மைகள்: வெளியான உளவுத்துறை ஆவணம்!

கசிந்த உளவுத்துறை ஆவணம் ஒன்றிலிருந்து கொரோனா தொடர்பாக சீனா கூறிய பொய்களும், மறைத்த உண்மைகளும் வெளிவந்துள்ளன. மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பரவும் என்பதைக் குறித்து சீனா கூறிய பொய், எச்சரிக்கை விடுத்தவர்களை காணாமல் போகச்செய்தது மற்றும் தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்க பிற நாடுகளுக்கு உதவ மறுத்தது ஆகிய விடயங்கள் அந்த ஆவணத்திலிருந்து தெரியவந்துள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளின் உளவுத்துறைகள் இணைந்த உளவுத்துறை அமைப்பான Five Eyes என்ற அமைப்பின் ஆவணம் ஒன்று கசிந்துள்ளது. அந்த ஆவணத்தில், இந்த உளவு அமைப்புகள், கொரோனா வைரஸ் வுஹான் சந்தைக்கு அருகிலுள்ள வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடித்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 15 பக்க ஆவணத்தில், சீனா கொரோனா குறித்த விடயங்களை ரகசியமாக வைத்திருந்தது சர்வதேச வெளிப்படைத்தன்மை மீதான தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனா கொரோனா குறித்த விடயங்களை உலகுக்கு தெரியப்படுத்தியவர்களையும் விமர்சகர்களையும் ‘காணாமல் போகச்செய்தது’ குறித்த விடயங்களும் அந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன. சீனா கொரோனா தொற்று குறித்து ஆரம்பத்திலேயே மற்ற நாடுகளுக்கு தெரிவித்திருந்தால், அவைகள் அதற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க போதுமான கால அவகாசம் கிடைத்திருக்கும் என்ற பெரிய குற்றச்சாட்டு சீனா மீது வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!