கொரோனாவிலிருந்து தன்னை காப்பாற்றிய மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய போரிஸ் ஜான்சன்!

கொரோனா வைரசால் உலக தலைவர்களில் முதன்முதலில் பாதிக்கப்பட்டது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (வயது 55). ஆரம்பத்தில் வீட்டில் தன்னைதானே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்ற போரிஸ் ஜான்சன், உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு 2 நாட்களுக்குப்பின் இயல்புநிலைக்கு திரும்பினார். 10 நாட்களுக்கும் மேலாக கொரோனாவுடன் போராடி தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அலுவலக பணிக்கு திரும்பிய போரிஸ் ஜான்சனுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தி கிடைத்தது. தனது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் மூலம் அழகான ஆண் குழந்தைக்கு அவர் தந்தையானார். இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்த 2 டாக்டர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக அவர்களின் பெயர்களை இணைத்து தனது மகனுக்கு வில்பிரெட் லாரி நிக்கோலஸ் ஜான்சன் என போரிஸ் ஜான்சன் பெயர் சூட்டியுள்ளார். இந்த தகவலை கேரி சைமண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கும், ஜான்சனுக்கும் ஆண் குழந்தை புதன்கிழமை பிறந்தது. அந்த குழந்தைக்கு எனது தாத்தா பெயரான லாரி, போரிஸ் ஜான்சனின் தத்தா பெயரான ஜான்சன் ஆகிய பெயரோடு, கொரோனா வைரசில் இருந்து போரிசின் உயிரை காத்த 2 டாக்டர்களான நிக் பிரைஸ், நிக் ஹார்ட் ஆகிய இருவரின் பெயரையும் சேர்த்து நிக்கோலஸ் என்றும் வைத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!