பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு தொற்று!

யாழ்ப்பாணம் – பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே, இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட 8 பேர் உள்ளிட்ட 68 பேருக்கு நேற்று யாழ் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் 3 பேருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 45 பேருக்கும், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால், 9 பேருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் நேற்று யாழ்ப்பாணத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தச் சோதனைகளில், 67 பேருக்கு தொற்று இல்லை என்ற முடிவு கிடைத்துள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள – கொழும்பு, ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!