ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்ரெம்பர் 16இல் விசாரணை!

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, செப்ரெம்பர் 16ஆம் திகதி ஆராயவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, பழைய செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த தேரரின் இறந்ததை அடுத்து, அவரது உடல், நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளே, இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை மீறி, ஆலய வளாகத்தில் சடலத்தை தகனம் செய்த கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட உள்ளிட்ட மூவருக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செயதிருந்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான, நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ், நீதியரசர் சோபித ராஜகருண ஆகியோர் முன்னிலையில், இந்த மனு நேற்று அழைக்கப்பட்டது. இதன்போது, இந்த மனுவை, செப்ரெம்பர் 16ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!