கோவிட்-19: தமிழகத்தில் ஒரே நாளில் 447 பேர் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 9,674 ஆக உயர்வு!

தமிழக மாவட்டங்களில் முறையான நடவடிக்கைகளாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் புதிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 447 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 64 பேர் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 26 குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட 45 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 10 மாவட்டங்களில், சென்னையில் 3 மாத குழந்தை உட்பட 17 குழந்தைகள் மற்றும் 346 பேரும், நெல்லையில் கத்தாரில் இருந்து வந்த 2 பேர் உட்பட 16 பேரும், திருவள்ளூரில் 15 பேரும், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 9 பேரும், காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 8 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், பெரம்பலூரில் 4 பேரும், தூத்துக்குடியில் 3 பேரும், கரூரில் 2 பேரும், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 66 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று சென்னையில் 2 பேர் உயிரிழந்தனர் அவர்களில் 43 வயது ஆண் சிறுநீரக கோளாறு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் கொரோனா பாதிப்புடன் கடந்த 8-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் 45 வயது பெண் ஒருவர் நீரழிவு நோய், அதிக ரத்த அழுத்தம் மற்றும் கொரோனா நோய் தொற்றால் கடந்த 7-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!