கட்டுக்குள் வர மறுக்கும் வெலிசர முகாம் – கடற்படையினரை இடம்மாற்றும் பணி ஆரம்பம்!

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படையினரை வேறு பகுதிகளிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

படைமுகாம்கள் குறிப்பிட்ட விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. முகாமில் உள்ளவர்கள் ஒருவருடன் ஒருவர் அதிகம் தொடர்புகொள்வதை குறைக்க வேண்டியுள்ளது, இதனை செய்யவேண்டும் என்றால் கடற்படையினர் அனைவரும் முகாமில் இருக்க முடியாது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட முதலாவது கடற்படை வீரர் மருத்துவமனைக்கு சென்றவேளை வெலிசர முகாமில் 5000 கடற்படையினர் காணப்பட்டனர்.

வெலிசரவிற்கு அருகில் உள்ள சுதுவெலயில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான கொரோனவைரஸ் நோயாளியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவேளையே அந்த கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டனர் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

சுமார் 250 படையினர் ஊரடங்கு வேளைகளில் உணவு விநியோக வாகனங்கள் மூலம் தங்கள் ஊர்களிற்கு திரும்பி குடும்பத்தவர்கள் உறவினர்களிற்கு தொற்று ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தற்போது மீள அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களிற்கு முன்னர் சுமார் 550 கடற்படையினர் இராணுவத்தினரால் நடத்தப்படும் முகாம்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் .

மே 18 ம் திகதி 250 கடற்படையினர் தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உடல்ரீதியான தனிமைப்படுத்தலிற்கு அவசியமான சூழலை ஏற்படுத்துவதற்காக நாங்கள் மேலும் பல கடற்படையினரை முகாமிலிருந்து கொண்டு செல்வோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அதேவேளை, ஒவ்வொரு நாளும் புதிதாக கடற்படையினர் பாதிக்கப்படுவதால் வெலிசர முகாம் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் சுகாதார சேவை தொற்றுநோய் நிபுணர்கள் நால்வரை நியமித்துள்ளது. அவர்கள் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

நோய் தொற்று இல்லாதவர்கள் என கருதி அணிவகுப்பு ஒத்திகைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டு கடற்படையினர் வைரசினால் பாதிக்கப்பட்டமை தெரியவந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அனைவரையும் சோதனையிடும் திட்டம் எங்களிடம் இல்லை கடற்படையிடமும் ஒரு வழிமுறையுள்ளது. கடற்படையினரை வேறு பகுதிகளிற்கு மாற்றுவதே எங்களின் முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!