பயிற்சி இல்லாத படையினரை கொரோனா தடுப்பில் ஈடுபடுத்தியதற்கு அரசே பொறுப்பு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசாங்கம் பயிற்சி இல்லாத படையினரை ஈடுபடுத்தியமைக்கு அரசாங்கமே பொறுப்பு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் பாதிக்கும் அதிகமானோர் கடற்படையினராக உள்ள நிலையில், தொடர்ந்தும், கடற்படையினர் மத்தியில் இருந்தே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல,

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகள் எதனையும்; வழங்காமல் , அதனைக் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வற்ற நிலையில் இருந்த படையினர் தொற்று கட்டுப்படுத்துவதற்கு எதற்காக பயன்படுத்தப்பட்டனர் என்று அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் வேறு எந்த நாடும், படையினரை பயன்படுத்தாததால் அரசாங்கம் இது குறித்து பொதுமக்களிற்கு பதிலளிக்க வேண்டும்.

படையினரின் பாதுகாப்பு குறித்த கரிசனையற்ற விதத்தில் படையினரை பயன்படுத்திய நாடு என இலங்கை வரலாற்றில் பதியப்படும். தடுப்பு நடவடிக்கையில் பயிற்சி இல்லாத படையினரை ஈடுபடுத்தியமைக்கு அரசாங்கமே பொறுப்பு.

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பியவர்களை கண்டுபிடிப்பதற்காக கடற்படையினரை பயன்படுத்திய போது, அவர்களிற்கு உரிய பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படவில்லை” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!