எங்களோடு ஒத்துப்போனால் வாருங்கள் இல்லையேல் ஓடிப்போங்கள் எச்சரிக்கும் ஜனாதிபதி.

சர்வதேச அமைப்புக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையிலேயே அவற்றிலிருந்து விலகுவதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச அமைப்புக்களினால் எழுப்பப்படுகின்ற சவால்மிக்க கேள்விகளுக்குத் தகுந்த பதில் இருக்குமாயின் அவ்வாறு அந்த அமைப்புக்களின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதற்கான அவசியம் ஸ்ரீலங்காவுக்கு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

போர்வெற்றியின் 11ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடாளுமன்ற வளாக மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, அநாவசியமான வகையில் அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அமைப்புக்களிலிருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

படையினரின் கௌரவத்திற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கண்டியில் நேற்றைய தினம் மாலை ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார, முன்னாள் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஸ்ரீலால் லக்திலக்க எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் முடிவில் ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, சர்வதேச அமைப்புக்களிலிருந்து விலகுவதாக தெரிவித்த அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கருத்துக்கு விமர்சனம் முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சர்வதேச அமைப்புக்களில் உறுப்புரிமைகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்ததற்கான காரணம், அந்த அமைப்புக்களினால் முன்வைக்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமையே.

சர்வதேச அமைப்புக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு நம்மிடையே தகுந்த பதில் இருக்குமானால் அவற்றை சமர்பித்து பதிலடி கொடுக்க முடியும். மாறாக பதில் ஏதும் இல்லை என்பதால்தான் உறுப்புரிமையிலிருந்து நீங்குவதாக அறிவித்து எச்சரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ந்தும் இங்கு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,

பொதுத் தேர்தல் ஓகஸ்ட் இறுதிவரை தாமதமாகலாம் என்று இருப்பதால், நாடாளுமன்றம் மேலும் 03 மாதங்களுக்குக் கூடாமலிருப்பது நாட்டிற்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கு அமைய ஓகஸ்ட் மாத இறுதியிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்படலாம்.

அப்படியென்றால் இன்னும் 03 மாதங்கள் செல்லும். ஆகவே இந்த நாட்டில் நாடாளுமன்றம் 06 மாதங்களுக்கு இல்லை. 06 மாதங்களாக நாடாளுமன்ற செயற்பாடு இன்றி நாட்டை ஆட்சி செய்யமுடியுமா? நாடாளுமன்றத்தில் இருந்தவர்களுக்கே நாடாளுமன்றின் அதிகாரம் பற்றி தெரியும். நாடாளுமன்றத்தில் இருந்திருக்காதவர்களுக்கு அதுகுறித்து தெரியாது.

நாடாளுமன்றத்திற்கு ஜனாதிபதியை விடவும் அதிகாரம் உள்ளது. ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புகூற வேண்டும். எனவே நாடாளுமன்றம் கூட்டப்படாமல் எவ்வாறு ஜனாதிபதி தேவையான அரச நிதிகளைக் கையாள முடியும்? ஜுன் 02ஆம் திகதியோடு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 03 மாதங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், அரசியலமைப்பின்படி அத்திகதியிலிருந்து அரச நிதியை ஜனாதிபதியால் கையாள முடியாது.

இந்நிலையில் நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும். கொரோனா வைரஸை ஒழித்த நாடுகள் நாடாளுமன்றத்தைக் கூட்டியே அந்த நடவடிக்கைகளை சிறப்பாக செய்தன. இன்று எமது நாட்டில் கடற்படையினரில் பலரும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கமே அதற்கு பொறுப்பு.

ஜனவரி மாதமே விமான நிலையங்களை மூடியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இன்று ஒருவர் கூட இந்த தொற்றினால் பீடித்திருக்க மாட்டார்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காததினால் இன்று படையினரிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

தற்போதுள்ள சூழலில் பொதுத் தேர்தலை நடத்தினால் சமூக இடைவெளியின்படி வாக்குச் சாவடியிலிருந்து 02 கிலோ மீட்டர்களுக்கு வாக்களார்கள் வரிசையில் இருக்க வேண்டும். தேர்தல் செலவுகளும் மூன்று மடங்குகளில் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!