கோத்தாவின் சீனப் பயணம் – மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர்

கோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இருந்து விடைபெறவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மகிந்த ராஜபக்சவை அவரது விஜேராம மாவத்தையில் உள்ள, வதிவிடத்தில் சந்தித்தார்.

இதன் போதே கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக, மகிந்த ராஜபக்சவிடம் அதுல் கெசாப் சில விடயங்களைக் கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச விரும்பப்படாதவர் என்று அதுல் கெசாப் கூறினார் என்றும் தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை அவர் வெளிப்படுத்தினார் என்றும், மகிந்த ராஜபக்சவின் பணியகப் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, சங்ரி லா விடுதியில், கடந்த மே 13ஆம் நாள், நடந்த வியத்மய ஆண்டு விழாவுக்கு முன்னதாக, கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிசா பிஸ்வால், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலராக இருந்த போது, 2014 பெப்ரவரி மாத தொடக்கத்தில், சிறிலங்கா வந்திருந்தார் என்றும், அவரை கோத்தாபய ராஜபக்ச மரியாதையாக நடத்தவில்லை என்றும், இந்தச் சந்திப்பின் போது, அதுல் கெசாப் நினைவுபடுத்தியிருக்கிறார்.

இதனை மகிந்த ராஜபக்சவின் செயலகபேச்சாளர் கூறியதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!