இராணுவத்தை அரிசி பிரச்சினைக்கு அனுப்புவதா? – கொந்தளிக்கிறார் சம்பிக்க

போரில் ஈடுபடுவதற்காக பயிற்சி வழங்கப்பட்ட இராணுவத்தை அரிசி ஆலை பிரச்சினையை கையாள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு இராணுவத்தை எங்கு எப்போது பயன்படுத்துவது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க விவசாயம் பற்றியும் சந்தைப்படுத்தல் குறித்தும் விபரமுள்ளவர்களை அனுப்ப வேண்டிய இடங்களிற்கு இராணுவத்தை அரசாங்கம் அனுப்பியது என குறிப்பிட்டுள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் விவகாரத்தை கையாள்வதற்கும் அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தியது இதன் காரணமாக இன்று எங்களிற்கு அரிசியில்லாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனால் இராணுவத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. அரிசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்கள் குறித்து இராணுவத்திற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை துப்பாக்கியால் கையாள முடியாது என்பதை அரசாங்கம் உணரவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இராணுவத்தினர் பயிற்றுவிக்கப்படாத விடயங்களிற்கு அவர்களை பயன்படுத்தவேண்டாம் அவர்கள் இதனால் அவமானமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து பிரச்சினைகளிற்கும் இராணுவத்தின் வலிமையை பயன்படுத்துவதில் அரசாங்கம் பெயர் பெற்றது,ரதுபல்வலவில் அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு இராணுவத்தை அரசாங்கம் பயன்படுத்தியது இதனால் என்ன விளைவு ஏற்பட்டது என்பது முழு உலகிற்கும் தெரியும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தில் கால்வாய்களை சுத்தம் செய்யவும் புற்களை அகற்றவும் குப்பைகளை அகற்றவும் இராணுவத்தை பயன்படுத்தினார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதனை நிறுத்தினோம். சீருடை அணிந்த படையினருக்கு உரிய கௌரவத்தை வழங்கினோம் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போது நிலைமை மீண்டும் மோசமடைகின்றது என தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளிடம் முகாம்கள் ஒவ்வொன்றாக வீழ்ச்சியடைந்து தோல்வியேற்பட்ட போதிலும் மக்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை. ஆனால் நாங்கள் தற்போது எதனை பார்க்கின்றோம்?மக்கள் பாதுகாப்பு படையினர் மீது நம்பிக்கை இழக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!