நீ பேசுவதை நான் ஏன் கேட்க வேண்டும் என்பது போல டிரம்ப் நடந்து கொண்டார்: கருப்பின இளைஞரின் சகோதரர் கண்ணீர்!

அமெரிக்காவில் பொலிஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட கருப்பின இளைஞரின் சகோதரர் ஜனாதிபதி டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் George Floyd என்ற 46 வயது கருப்பின இளைஞர் கடந்த 27-ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவர் கைது செய்யப்பட்டார். இவரை கைது செய்த போது பொலிசார் இவரை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தி இருக்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியதால், இது அங்கு பெரிய உள்நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்த மரணம் காரணமாக அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. முதலில் மின்னேபோலிஸ் பகுதியில் மட்டும் போராட்டம் நடந்தது. அதன்பின் இந்த போராட்டம் அப்படியே மின்னெசோட்டா வரை விரிவடைந்தது. தற்போது அமெரிக்கா முழுக்க இந்த போராட்டம் விரிவடைந்து இருக்கிறது. பல மாகாணங்களில் இந்த போராட்டம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த போராட்டங்கள் தற்போது டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. டிரம்ப் இந்த போராட்டங்கள் காரணமாக பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது. இந்த போராளிகளை நாய்கள் என்றும், திருடர்கள் என்றும் டிரம்ப் கூறியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதிபர் டிரம்ப், கொலை செய்யப்பட George Floyd-ன் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டுடன் பேசினார். போனில் தொடர்பு கொண்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார். ஆனால் இதுவே தற்போது அதிபர் டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. அதன்படி இந்த போன் கால் தனக்கு பெரிய அதிர்ச்சி அளித்ததாக கொலை செய்யப்பட ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் பிலோனைஸ் பிளாய்டு தெரிவித்துள்ளார். டிரம்ப் எனக்கு போன் செய்வார் என்று தெரியும். ஆனால் அவர் என்னை பேசவிடமாட்டார் என்பது தெரியாமல் போய்விட்டது.

அவர் என்னை பேசவே அனுமதிக்கவில்லை. என் குரலை கூட வர கேட்கவில்லை. அவராக போன் செய்தார். பேசினார், போனை வைத்துவிட்டார். என் தரப்பை பேச அவர் விரும்பவில்லை. நான் அவரிடம் பேச முயன்றேன். அன்று நடந்த சம்பவத்தை விளக்க முயன்றேன். ஆனால் டிரம்ப் வேண்டும் என்றே அதற்கு அனுமதிக்கவில்லை. அவர் ஏன் எனக்கு போன் செய்தார் என்றே தெரியவில்லை. எல்லாம் அரசியல். நீ பேச வருவதை நான் ஏன் கேட்க வேண்டும் என்பது போல அவர் நடந்து கொண்டார்.

எனக்கு இது மிக கஷ்டமாக இருக்கிறது. நான் அவரிடம் நீதி வேண்டும் என்று கேட்டேன். ஒரு முன்னேறிய தேசத்தில், பட்ட பகலில் இப்படி கொலை நடக்கிறது. என்னை இது பெரிய அளவில் பாதித்து உள்ளது. என் மனம் உடைந்துள்ளது. எங்கள் கருப்பின மக்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். எனக்கு புரியவில்லை. நாங்கள் ஏன் இதை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். என் சகோதரனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவனை இனி பார்க்க முடியாது. அவனை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!