தெமட்டகொட குண்டுதாரி; பிள்ளைகளை அணைத்துவாறு வெடித்து சிதறினார் – சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற போது கொழும்பு – தெமட்டகொட, மஹவில கார்டன் வீட்டில், தற்கொலை குண்டுதாரியான கர்ப்பிணி பெண் மாபிள் தரையில் அமர்ந்து பிள்ளைகளையும் அனைத்துக் கொண்டு குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என்று பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி சாட்சியமளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (04) ஆஜராக சாட்சியமளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் சாட்சியத்தில்,

‘குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீடு இரு மாடிகளைக் கொண்டிருந்தது. முதலாவது மாடியில் உள்ள அறையொன்றிலேயே முதல் குண்டு வெடித்தது. அந்த மாடியின் மேல் தரையில் குண்டுவெடிப்பால் பாரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக மேல் மாடி உடைந்து விழும் அளவில் இருந்தது.

அந்த பாதிப்புக்களைப் பார்க்கும் போது என கனிப்பின் பிரகாரம், குறித்த தற்கொலை குண்டுதாரியான பெண், மாபிள் பதிக்கப்பட்ட தரை மீது, குண்டினை வைத்து நிலத்தில் அமர்ந்து, தமது பிள்ளைகளை அருகே அழைத்துக் கொண்டு குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும்.

அவ்வீட்டில் இடம்பெற்ற 2வது குண்டு வெடிப்பு சம்பவம், அந்த அறையில் இடம்பெறவில்லை. அது வேறு ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வெடிப்பு இடம்பெற்ற அறை, ஒருவர் மட்டும் இருக்க முடியுமான சிறிய இடமாகும்.

எவ்வாறாயினும் இந்த வெடிப்பு இடம்பெர்ற மஹவில கார்டன் வீட்டிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் சடலங்களை மீட்டபோது, தற்கொலை குண்டு தாரியான பெண், அவரது பிள்ளைகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறிக் கிடந்தனர்.’ – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!