மனவளர்ச்சி குன்றிய சிறுவனை தாக்கிய 3 பொலிசார் இடைநிறுத்தம்!

அளுத்கம – தர்காநகரில், மே 25ஆம் திகதி, மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுவன், தாரிக் அஹமட் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், 3 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆயினும் மாலை 7.45 மணியளவில் வெளியிடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவித்தலில், குறித்த சம்பவம் தொடர்பில், வீதிச் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது பணியை உரிய முறையில் மேற்கொள்ள தவறியதாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதியில் விசேட பணிக்காக, அளுத்கம பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த களுத்துறை பொலிஸ் பாடசாலையில் பணிபுரியும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணிபுரியம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் என மூன்று பேரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈவு, இரக்கமின்றி சட்டத்தை கையிலெடுத்து, மிகக் கொடூரமாக பொலிஸாரால் தாக்கப்பட்ட தாரிக் அஹமட் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!