“அமுதா என்னை மன்னித்து விடு, என் அன்பு மகனை நல்ல படியா பார்த்துக்கொள்” – கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!

தமிழகத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் 4 பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ரெகுபதி (43). மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தியா (14), சஞ்சய் (13) என இரண்டு பிள்ளைகள். கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதமாக வருமானம் இல்லாமல் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா ஊரடங்கால் 4 மாதமாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை.

அதனால் கடன் வாங்கியதற்கான மாதம் வட்டி பணம், வார, மாதக் குழு கடன்கள், ஆட்டோவிற்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ஆகியவற்றைச் செலுத்த முடியவில்லை. தற்போது எல்லாம் என்னை நெருக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். என் மறைவிற்குப் பிறகு என் மனைவியிடம் யாரும் பணம் கேட்டுத் தொல்லை கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

முடிந்தால் தமிழக அரசிடமிருந்து உதவி பெற்று அந்தப் பணத்தை என் மனைவியிடம் கொடுத்து உதவிடுங்கள். அமுதா என்னை மன்னித்து விடு. என் அன்பு மகனை நல்ல படியா பார்த்துக்கொள். என் செல்லக்குட்டி சஞ்சய் அப்பா உன் கூடவேதான் இருப்பேன். எனது தங்கை ரேவதி எனது பாசமச்சான் மற்றும் உறவினர்கள் அனைவரும் என் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மன்னித்து விடுங்கள்.

ஆட்டோவை விற்று அதற்கான கடனை அடைத்துவிடுங்கள். மேலும் நமது சங்கத்தின் மூலமாகக் கிடைக்கும் உதவித்தொகையை எனது மனைவியிடம் கொடுத்துவிடுங்கள். எனது மகனின் மருத்துவச் செலவையும் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு ஏதேனும் உதவித்தொகை கிடைத்தாலும் அதையும் கொடுங்கள். இதுவரை நான் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து என்னை அரவணைத்த நமது சங்கத்தினருக்கு நன்றி. நமது சங்கத்தினர் முன் நின்று எனது உடலை அடக்கம் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என எழுதிவைத்துள்ளார். ரெகுபதியின் சடலத்தை கைப்பற்றியுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!