மத்திய வங்கி அதிகாரிகள் மீது ஜனாதிபதி பாய்ச்சல்!

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு, ஏனைய நாடுகளின் மத்திய வங்கிகளைப் போல, இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தலைமையிலான, சிரேஸ்ட அதிகாரிகளை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே, ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான நிதிக் கொள்கையை திட்டமிடுவதற்கான பொறுப்பு இலங்கை மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது என்பதையும், ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் மத்திய வங்கிகள், நிதிசார் திட்டங்களை அறிமுகப்படுத்தி செயற்படுத்துவதாகவும், ஆனால் இலங்கை மத்திய வங்கி அவ்வாறான எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை கையாளக் கூடிய யோசனைகளை மத்திய வங்கி தாமதமின்றி அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!