வடக்கின் பாதுகாப்பு நிலை – பலாலி கூட்டத்தில் விரிவாக ஆலோசனை!

வடக்கின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பலாலியில் நேற்று உயர்மட்டக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அண்மையில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்றது.

பலாலி படைத் தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, தேசிய புலனாய்வு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மற்றும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு படைத் தலைமையக தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள், கொரோனா தாக்கங்கள், சட்டம் ஒழுங்கை பேணுதல், அமைதி மற்றும் நல்லிணக்கம், போதைப் பொருள் கடத்தல், மற்றும் விற்பனை, கொள்ளைகள், குற்றங்கள், நல்லிணக்க செயற்பாடுகளில் உள்ள தடைகள், சமூக பொலிஸ் பங்கு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பொதுப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் வடக்கில், இனி எந்த ஒரு அசம்பாவிதமும் இடம்பெறாத வகையில், அமைதியை பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!