கடல் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து, புகலிடம் கோரி இலங்கைக்கு வருபவர்களை தடுப்பதற்காக, இலங்கை கடற்படை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், புகலிடம் கோருவோரைத் தடுப்பதற்காக, கடற்படையினர் பல கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக பயணிகளின் வருகையை நி அரசாங்கம் நிறுத்தியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க கடற்படையினர் கடல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

கடற்படையினர் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும், மீன்கள் அடர்த்தி அதிகமுள்ள இந்தப் பகுதிகளின் ஊடாக, மீனவர்கள் என்ற போர்வையில், புகலிடம் கோருவோர் நாட்டுக்கு நுழையக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடற்படைத் தளபதியின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக, சர்வதேச கடல் எல்லையிலும் கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு இராணுவம், விமானப்படை, பொலிஸ் மற்றும் கடலோரக் காவல்படை என்பன முழுமையான ஆதரவை அளித்து வருவதாகவும், கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!