தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு? – ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக் டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையின்போது, எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்? எவ்வளவு பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்? எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் போன்ற தகவலையும், ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள நிவாரணங்கள் மக்களிடம் முறையாக சென்றடைகிறதா? என்பது குறித்த விவரங்களையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்வார்.

தற்போது சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் வீரியம் பெற தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக ஈடுபட வேண்டும். கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சில அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் மாவட்ட கலெக்டர்களுக்கு சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் கலந்துகொள்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

முழு ஊரடங்கா?

பல மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையிலும் முழு ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தொற்றை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!